Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆதரவுஅளித்து திட்டத்தை உடனே செயல்படுத்த முன்வர வேண்டும் என ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நோபல் பரிசுபெற்ற ஆய்வாளர்கள் ஆர்தர் மெக்டோனால்டு, கஜிடா மற்றும் பேராசிரியர்கள் டி.ஆர்.கோவிந்தராஜன், ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட 15 அறிவியலாளர்கள் கூட்டாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐஎன்ஒ) அமைக்கும் திட்டம், நம் நாட்டின் இயற்பியல் ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால முயற்சியில் உருவானதாகும். இந்த திட்டம், வணிக நோக்கத்துக்கானது அல்ல. இயற்கை பற்றிய ஆழமான புரிதலுக்காக எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, முழுவதும் ஆய்வு சார்ந்து செயல்படுத்தப்பட உள்ளது.

நியூட்ரினா ஆய்வு திட்டம் என்பதுநமக்கு புதிதானது அல்ல. ஏற்கெனவே கர்நாடகாவின் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1960-களில்அமைக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மூலம் வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1992-ல் சுரங்கம் மூடப்பட்டபோது, ஆய்வுக்கூடமும் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து விஞ்ஞானிகளின் பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதிதந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த இதுவரை எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆனால், சில சமூக ஆர்வலர் குழுக்கள், இந்த திட்டம் பற்றி சரியான புரிதலின்றி எதிர்ப்பதுடன் தவறான கருத்துகளை முன்வைத்து பொதுமக்களிடம் அச்சத்தை உருவாக்கி வருகின்றன. ‘நியூட்ரினோகதிர்வீச்சு வெளிப்பாடு மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மலையில் சுரங்கப் பாதை அமைப்பது அதைச் சுற்றிய அணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திட்டத்தின் அணுக் கழிவுகள் மலைப்பகுதிகளில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்’ என்பன போன்ற அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அறிவியல் விளக்கங்கள், ஐஎன்ஓ இணையதளத்தில் பல்வேறு மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அனைவரும் பார்த்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தில் நாட்டின் பலபல்கலைக்கழகங்களோடு, பல்வேறு இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதைசாத்தியமாக்கினால் உலக அளவில்அறிவியல் துறையில் இந்தியா முன்னணி இடத்தை பெறும்.

நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கும், அந்த இடத்தைவிட்டு தொலைவில் உள்ள அணைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. நியூட்ரினோ ஆய்வகம் என்பது சுரங்கப் பகுதியில் அமைக்கப்படும் தொலைநோக்கி போன்றதாகும். இது கொடைக்கானல், ஊட்டி பகுதிகளில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள ரேடியோ தொலைநோக்கிகளுக்கு ஒப்பானதாகும். இதன்மூலம் மலைகளில் பாறைகளை ஊடுருவி வரும் எண்ணற்ற நியூட்ரினோ துகள்களை கண்டறிய முடியும். மேலும், நியூட்ரினோவில் எந்த கதிர்வீச்சு தன்மையும் கிடையாது. எதனுடனும் தொடர்பு கொள்ளாது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருக்கும் பாறைகள் கடினத்தன்மையுடன் இருக்கும். இவை காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு தமிழகம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை உணர்ந்துதான், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தொடர்ந்து இதற்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் தொடங்குவதில் ஏற்பட்டுவரும் தாமதம் நமது இளம்ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, காலதாமதம் செய்யாமல் இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்து அதை உடனே செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x