

அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்பு பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களில், அனுமதியின்றி நியமிக்கப்பட்ட பணியாளர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இணைஆணையர்களுக்கு அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறநிலையத் துறையின் நிர்வாக மற்றும் மேற்பார்வை ஆளுகையின்கீழ் உள்ள அனைத்து சமயநிறுவனங்களுக்கும் பணியாளர் தொகுதி பட்டியலுக்கு ஆணையரிடம் அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். கோயில்களில் தற்போதைய தேவைகளை கருத்தில்கொண்டு அத்தியாவசிய பணி களை மேற்கொள்ள கணினி இயக்குநர், மின் பணியாளர் போன்ற பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அதற்கான ஆணையரின் அனுமதி விவரங்களை குறிப்பிட்டு புதிதாக பணியாளர் தொகுதி பட்டியல் அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்பு பட்டியலில் இடம்பெறாத பணியிடங்களில் ஆணையரது அனுமதியின்றி அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர், தக்கார், நிர்வாகிகளின் தீர்மானங்களின் அடிப்படையில் பணியாளர்கள் எவரும் தற்காலிகமாகவோ அல்லது தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையிலோ அல்லது ஊதியவிகித முறையிலோ நியமிக்கப்பட்டிருப்பின் அவர்களை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இந்து சமய நிறுவனங்களுக்கு ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுப்பு பட்டியல் பெறப்படாமல் அல்லது பெறப்பட்டிருப்பின் அத்தகைய தொகுப்பு பட்டியலில் இடம் பெறாத பணியிடங்களில் பணியாளர்கள் எவரையும் நியமிக்கப்பட்டது தெரியவந்தால், தொடர்புடையவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ஆணையர் குமரகுருபரன் கூறியுள்ளார்.