வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கேட்டதால் விஷ மாத்திரை கொடுத்து 3 பேர் கொலை: ஈரோட்டில் 2 பேர் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னிமலை அருகே கரோனா மாத்திரை எனக்கூறி விஷ மாத்திரையைக் கொடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கடன் விவகாரம் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30). இவர்களது தோட்டத்தில் குப்பம்மாள் (65) என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர்களது தோட்டத்துக்கு வந்த மர்மநபர், தான் கரோனா சிகிச்சை முகாமில் இருந்து வருவதாகக் கூறி, தொற்று ஏற்படாமல் இருக்க சத்து மாத்திரையைச் சாப்பிடுமாறு கொடுத்துள்ளார்.

இதனை நம்பி நால்வரும் மாத்திரையைச் சாப்பிட்ட நிலையில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மல்லிகா உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபா மற்றும் குப்பம்மாள் ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சென்னிமலை போலீஸார், சம்பவம் தொடர்பாக கல்யாணசுந்தரம் (43), சபரி (19) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ரூ.10 லட்சம் கடன்

சென்னிமலை அம்மாபாளையத்தில் வசிக்கும் கல்யாணசுந்தரம், அப்பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கருப்பண்ணனிடம் இருந்து ரூ.10 லட்சம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். கடனுக்கு அவர் அதிக வட்டி கேட்டதால் கோபமடைந்த கல்யாணசுந்தரம், அப்பகுதியைச் சேர்ந்த சபரி மூலம், விஷ மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீஸார் கூறினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in