

சேலத்தில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி அமைப்பின் ஒன்றியச் செயலாளர் உட்பட இருவர் திருப்பூரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் செல்லபாண்டியன் (45). இந்து முன்னணி சூரமங்கலம் ஒன்றிய செயலாளர். கடந்த சில தினங்களுக்கு முன், சேலம் கொண்டலாம் பட்டி ரவுண்டானா பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக இவரது நண்பருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.
இதையறிந்த செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செல்லபாண்டியன் பேசினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின. இதுதொடர்பாக, செல்லபாண்டியன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நண்பர் தமிழரசுவுடன் திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உறவினர் வீட்டில் செல்லபாண்டியன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் போலீஸார் திருப்பூர் வந்து, செல்லபாண்டியன், தமிழரசு இருவரையும் நேற்று காலை கைது செய்து, சேலம் அழைத்து சென்றனர்.