Published : 12 Mar 2014 11:50 AM
Last Updated : 12 Mar 2014 11:50 AM

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு: சிதம்பரம் – திருமாவளவன், திருவள்ளூர் - ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் திருமாவளவனும் திருவள்ளூரில் துரை. ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) மற்றும் திருவள்ளூர் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து நிருபர்களிடம் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

சிதம்பரத்தில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். திருவள்ளூரில் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார். நாங்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம். ரவிக்குமார் ஏற்கெனவே காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும். மதவாத, சாதிய சக்திகளை முறியடிக்க, ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகள் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டார். மதச்சார்பின்மைக்கு பாதுகாப்பு, வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க பாடுபடுதல். தனியார் துறைகளில் தலித் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு, மதம் மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற அம்சங்களுடன். தலித்களுக்கு தனி வங்கி உருவாக்க வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு சாகுபடி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடுபடும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x