

சென்னையில் நடைபெற்று வரும் கூவம் மற்றும் அடையாறு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முக்கிய வடிகால்களாக உள்ளன. கழிவுநீரால் மாசடைந்துள்ள இந்த ஆறுகளை சீரமைக்க அரசு சார்பில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்துறைகளின் ஒருங்கிணைப்பு பணி மூலம் ஆறுகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கடந்த 2015-ம் ஆண்டு பெருமழை பெய்தபோது, ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் நீர் கொள்திறன் குறைந்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் கரையோரங்களில் ஆக்கிரமித்துள்ள 14,257 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆறுகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ஆறுகளின் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, ஆறுகளுக்கு வரும் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் கரையோரங்களில் உள்ள கழிவுகளை அகற்றி தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கரையோரங்களில் மரக்கன்றுகள் நடவு, பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் அமைப்பது போன்ற பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.
இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். அவர், அண்ணாநகர் மண்டலத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள், அடையாறு திரு.வி.க.பாலம் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்றில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் தற்போதைய நிலை, செய்யப்பட உள்ள பணிகள் குறித்து அறக்கட்டளையின் திட்ட அதிகாரி வி.கலையரசன் விளக்கினார். இப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலான், மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.