Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுவையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கியுள்ளன. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

புதுவை மாநிலத்தில் கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதையடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011 ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு மீண்டும்உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அனந்தலட்சுமி என்பவர் 2011-ம்ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு, பெண்களுக்கான ஒதுக்கீடை முறைப்படுத்திய பின் தேர்தலை நடத்த வேண்டும் என மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடைமுறைகளை பின்பற்றிஉள்ளாட்சித் தேர்தலை நடத்தஉத்தரவிட்டது. இதை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத் தாமல் இருப்பது சட்ட விரோதம். தேர்தலை நடத்தாமல் அரசு காலதாமதம் செய்வதாக தோன்றினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்தது.

இந்நிலையில் புதுவையைச் சேர்ந்த பாலாஜி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது குறித்துமனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். வார்டு மறுவரையறை ஏதேனும் நிலுவையில் இருந்தால் நான்கு மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை மாநில தேர்தல் ஆணையராக ராய் பி தாமஸ் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகள் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. புதுவை மாநிலத்தில் புதுவை, உழவர்கரை, ஏனாம், மாகே, காரைக்கால் என 5 நகராட்சிகள் மற்றும் வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளார், நிரவி, டிஆர் பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. மொத்தம் 98 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

மறுசீரமைப்பில் புதுவை நகராட்சியில் இருந்த 42 வார்டுகள் 33 வார்டுகளாகவும், உழவர்கரை நகராட்சியில் இருந்த 37 வார்டுகள் 42 வார்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து நகராட்சியிலும் 122 வார்டுகளை சீரமைத்து 116 வார்டுகளாக மாற்றியுள்ளனர். மறுசீரமைப்பில் வார்டுகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சிகளில் வாக்காளர் எண்ணிக்கை சமமாக இல்லாததையும் சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இப்போது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுவாக்காளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மக்களின் பார் வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம்,ஆட்சேபனை குறித்த பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 28) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு மாதங்களில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதுவையிலும் அக்டோபர் மாதத்துக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. கரோனாவால் தள்ளிப் போகாது” என்று குறிப்பிடுகின்றன.

தயாராகும் அரசியல் கட்சிகள்

கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கி யுள்ளனர். பல கட்சிகளும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கட்சியினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், “கிராம பஞ்சாயத் துக்கு ஒரு காங்கிரஸ் தலை வரை நியமிக்க வேண்டும். தகுந்தவேட்பாளர்களை அடையாளம் காண வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல் பிற கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அக்டோபருக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x