

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது மாநில அரசின் பல்வேறு ஊழியர்களும் ஒருங் கிணைந்து சிறப்பாக செயல்பட்ட னர் என்று மாநில தேர்தல் ஆணைய செயலர் ஜோதி நிர்மலா சாமி பாராட்டு தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ‘பேரிடர் மேலாண்மை, சென்னை வெள்ளம் - ஓர் ஆய்வு’ எனும் தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில் ஜோதி நிர்மலா சாமி பேசியதாவது:
சென்னையில் ஏற்பட்ட இந்த பேரிடருக்கு காரணம் மழை. இப்படி ஒரு மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை, சில தினங்களில் பெய்து நகரின் வாழ்வை முடக்கியது. ஆனாலும், இயற்கைச் சீற்றத்தில் இருந்து மக்களை மீட்கும் பணியில் மாநில போலீஸார், தீயணைப்புப் படையினர், மின்சார துறையினர், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் ஒருங் கிணைந்து செயல்பட்டனர். ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றி இந்த நகரை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.
மீட்புப் பணியில் 600 படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. 6,650 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டன. சாலைகளை உடனடியாக சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப் பட்டது. பலதுறை ஊழியர்கள் இணைந்து செயல்பட்டு இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொடுத் தனர்.
இவ்வாறு ஜோதி நிர்மலா பேசினார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேசும்போது, “சென்னை வெள்ளத்தில் நானும் பாதிக்கப் பட்டேன். பல இயற்கை பேரிடர் களை பார்த்திருக்கிறேன். பலர் முதல்வராக இருந்து அந்த பேரிடர்களை சமாளித்ததையும் கவனித்திருக்கிறேன். ஆனால், இம்முறைதான் அனைத்து அரசியல் கட்சிகளின் அலுவலகங் களும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் இடமாகவும், மக்கள் தங்குமிடமாகவும் மாறியதை கண்டேன். இந்தப் பேரிடரின்போது தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டது. எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த அரசு செய்து வருகிறது. துப்புரவு, சுகாதாரப் பணிகள் மற்றும் மனநல ஆலோசனை வழங்கும் பணிகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது. இயற்கைப் பேரிடர்களை சமாளிப்பது குறித்த அறிவை பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகம் 2 பாடப்பிரிவுகளை நடத்தி வருகிறது’’ என்றார்.