

புதுச்சேரியில் முழு கல்விக் கட்டணம் வசூலித்த பள்ளிகள் 25 சதவீத கட்டணத்தை திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை முழுமையாக பதவியேற்று பணி தொடங்கவுள்ளதற்கு வாழ்த்துகள். அமைச்சரவை காலதாமதமாக அமைந்துள்ளதைப் போல் அல்லாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் காலதாமதம் ஆக்காமல் விரைந்து மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கரோனா தொற்று 3-ம் அலை வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எடுக்கப்படும் அவசியமான நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்பை தடுக்கவேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு பாதிப்பு தொடர்கிறது. எனவே, அவர்களுக்கு உரிய சிகிச்சைகள், ஆலோசனைகளை அளித்து பாதுகாப்பு தர வேண்டும்.
கரோனாவால் உயிரிழந்த எளிய குடும்பத்தினர் அனைவருக்கும் நிதியுதவி வழங்க வேண்டும். கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வியும், பாதுகாப்பும் தர வேண்டும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும், கரோனாவால் இறந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்திற்குதேவையான உதவிகளையும் உடனே செய்ய வேண்டும். கரோனா மீதுள்ள பயம் நீங்கி, மக்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதிய அமைச்சரவை விரைந்து எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை கணக்கில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிகளும் பேருந்து, சீருடை, ஆய்வகம், விளையாட்டு உள்ளிட்ட பிற கட்டணங்கள் எதையும் வசூலிக்கக்கூடாது என்றும், கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டும், அதுவும் 2-க்கும் மேற்பட்ட தவணைகளில் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணத்தையும் வற்புறுத்தி முழுமையாக வசூலித்துவிட்டன. அவ்வாறு வசூலித்த பள்ளிகள் அரசு உத்தரவை தாண்டி அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளிக்கவும், வசூலிக்காத பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணத்தை மட்டும், அதுவும் மூன்று தவணைகளில் வசூலிப் பதையும் அரசு ஊர்ஜிதப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.