

விக்கிரவாண்டி அருகேயுள்ளது செ.குன்னத்தூர் கிராமம். இக்கிராமத்தில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் தன் நிலத்தை தானமாக அளித்தார். அந்த இடம் அருகே கிராமத்திற்கு பொதுவான இடுகாடு உள்ளது.
இதை பள்ளிக் கல்வித் துறையினர் கவனித்தார்களா என்று தெரியவில்லை.இங்கு இரண்டு மாடியுடன் கூடிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை சுமார் 200 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் உயிரிழந் தவர்கள் உடல்கள் பள்ளி வேலை நேரத்தில் எரிப்பதால் குமட்டும் வாடை பள்ளியை சூழ்ந்து கொள்வதால், வகுப்புகளின் ஜன்னல்களை மூடி பாடம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி எதிரிலேயே இடுகாடு இருப்பதால் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர். இந்த இடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது இடுகாட்டிற்கு சுற்றுச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
கரோனா தொற்றால் பள்ளிகள் இயங்காமல் உள்ளது. கரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்து பள்ளிகள் திறக்கும் முன் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.