

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ரூ. 17 லட்சம் மதிப்புள்ள சுறா பீலி, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, ஏலக்காய் ஆகியவற்றை மெரைன் போலீஸார் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மெரைன் போலீஸார் கொடுத்த ரகசியத் தகவலின்பேரில் தேவிபட்டினம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ், சார்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, தலைமைக் காவலர் இளையராஜா உள்ளிட் டோர் கீழக்கரை அருகே சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 மூட்டைகளில் 450 கிலோ தடை செய்யப்பட்ட சுறா பீலி (சுறா இறக்கை), 5 மூட்டைகளில் 250 கிலோ ஏலக்காய் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சதாம் உசேன்(28) என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அதில் அப்பொருட்களை கீழக்கரை காசிம் முகம்மதுவின் குடோனுக்கு கொண்டு செல்வ தாகத் தெரிவித்தார். தொடர்ந்து காசிம் முகமதுவின் குடோனை சோதனையிட்டு 55 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காசிம் முகம்மது (50), முகம்மது மீரா சாகிப்(49), சகாப்தீன் சாகிப்(58), பெரியபட்டினம் இம்ரான்(34), சேதுக்கரை மேல புதுக்குடி அக மது உசேன்(30), ஓட்டுநர் சதாம் உசேன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சுறாபீலி, கடல் அட்டைகள், ஏலக்காய்களை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்துள்ளதாக மெரைன் போலீஸார் தெரிவித்தனர்.