Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM

விளாத்திகுளம், புதூர் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம்: வத்தலுக்கு நல்ல விலை இருந்தும் மகசூல் குறைந்தது

கோவில்பட்டி

விளாத்திகுளம், புதூர் பகுதியில் வத்தலுக்கு நல்ல விலை கிடைக்கும் நிலையில், மிளகாய் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் அதிகமாக வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவை பயிரிடப் படுகிறது. புரட்டாசி மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது வெங்காயத்தில் ஊடுபயிராக மிளகாய் விதைக்கப்படும். விதைத்த 6-வது மாதம் முதல் பூப்பிடித்து, காய்பிடிக்கிறது. தொடர்ந்து சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் பலன் கொடுக்கும்.

முண்டு மிளகாய் அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்குள்ள நிலங்கள் கரிசல் பூமி என்பதால், மிளகாய் பழங்கள் திரட்சியாக விளையும். மானாவாரியில் குறைந்தளவு பயிரிடப்படும் சம்பா மிளகாய், தோட்டங்களில் அதிகம் விதைக்கப்படுகிறது.

வழக்கமாக ஏக்கருக்கு 3 முதல் 5 குவிண்டால் வரை முண்டு வத்தல் மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான மழை பெய்ததால், ஏக்கருக்கு ஒரு குவிண்டால் கிடைப்பதே அரிதாகிவிட்டது. இதனால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டது.

மகசூல் எடுத்த முண்டு மற்றும் சம்பா வத்தலை விவசாயிகள், நல்ல விலைக்காக விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்திருந்தனர். தற்போது முண்டு வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரை விலை போகிறது. சம்பா வத்தல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

விளாத்திகுளம், புதூர் பகுதியில் விளைவிக்கப்படும் முண்டு வத்தல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ் டிரா உள்ளிட்ட வெளி மாநிலங் களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

வத்தலுக்கு நல்ல விலை இருந்தும் போதிய மகசூல் இல்லா ததால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட வத்தலின் காம்பு பகுதியை அகற்றி, தரம் பிரித்து மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “இந்தாண்டு அதிக மழை பெய்ததால் வெங்காயம், மிளகாய் கொத்தமல்லி பயிர்கள் பாதிக்கப் பட்டன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். வத்தலில் கூட எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. வரக்கூடிய பருவ ஆண்டு இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன் நிலங்களை உழுது, பண்படுத்தி தயார் செய்ய வேண்டும். எனவே, காலதாமதம் இன்றி காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x