

இனப்பெருக்க தடைக்காலம், கரோனா ஊரடங்கு போன்றவற் றால் கடலுக்குச் செல்லாமல் இருந்த நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 77 நாட்களுக்குப் பிறகு ஜூன் 30 முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல உள்ளனர். இதை முன்னிட்டு, படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றி தயாராகும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு, அரசால் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக் காலம் கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனால், நாகை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததன் காரணமாக, பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மீன்களை கொள்முதல் செய்யும் மீன் வியாபாரிகள் நாகைக்கு வர முடியவில்லை. இதனால், மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள 1,500 விசைப்படகுகள், 5,000 பைபர் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால், மீன்பிடி மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த ஒரு லட்சம் மீனவர்கள் வேலையிழந்து இருந்தனர். குறைந்த தொலைவுக்குச் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குள் சென்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 30-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீன்பிடி தடைக்காலம், கரோனா ஊரடங்கு போன்றவற்றால் கடலுக்குச் செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் 77 நாட்களுக்குப் பிறகு ஜூன் 30-ம் தேதி அதிகாலை முதல் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து, நாகையில் உள்ள ஐஸ்கட்டி தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கி உள்ளன. மேலும், ஐஸ்கட்டிகளை மூட்டைகளாகக் கட்டி, சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி, துறைமுகத்துக்கு கொண்டு வந்து, விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்காலிலும்...
இதேபோல, நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காரைக்கால் மாவட்ட மீனவர்களும் ஜூன் 30-ம் தேதி முதல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்வது என முடிவு செய்துள்ளனர். அதற்கேற்ற வகையில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில், தொழிலுக்கு செல்வதற்கு தேவையான ஆயத்தப் பணிகளை மீனவர்கள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.