

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள சோமசேகரபுரம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் காரில் வந்தனர். அவர்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரின் வீட்டில் இருந்த 3 ஆடுகள் உட்பட மொத்தம் 6 ஆடுகளைப் பிடித்து, கார் டிக்கியில் அடைத்து கடத்திச் செல்ல முயன்றனர்.
ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பகுதி மக்கள், கார் டிக்கியில் ஆடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களைப் பார்த்ததும், காரில் வந்தவர்கள் ஆடுகளுடன் காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றனர். உடனே, பொதுமக்கள் அந்தக் காரை விரட்டிச் சென்றனர்.
மன்னார்குடி சாலையில் இரட்டை புலி என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக காரில் கோளாறு ஏற்பட்டதால் கார் நின்றது. இதையடுத்து, ஆடுகளுடன் காரை அங்கேயே விட்டுவிட்டு, திருடர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு சென்ற கோட்டூர் போலீஸார் கடத்தப்பட்ட ஆடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.