

கல்லணைக் கால்வாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் சாகுபடியை குறுவை பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் பகுதி பழைய டெல்டா எனவும், கல்லணைக் கால்வாய் 1934-ம் ஆண்டு வெட்டப்பட்ட பின்னர் ஏற்படுத்தப்பட்ட பாசன பகுதி புதிய டெல்டா எனவும் அழைக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், குறுவை சாகுபடி என்பது பழைய டெல்டாவில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அரசு கணக்கில் பதிவாகியுள்ளது. கல்லணைக் கால்வாய் பாசனம் பெறும் தஞ் சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி ஆகிய பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுவதாக ஆரம்ப கால அரசு கணக்கில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் பம்புசெட் மூலம் விவசாயிகள் முன்பட்ட குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் நெல் சாகுபடியையும், கோடைக்காலங்களில் உளுந்து, எள், கடலை ஆகிய பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். மேலும், மானாவாரிப் பகுதிகளிலும் பம்புசெட் பாசனம் அதிகளவு இருப்பதால், நெல் சாகுபடியின் பரப்பளவு உயர்ந்துள்ளது. அதன்படி, இப்பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை பருவ சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், குறுவை சாகுபடிக்கு வழங்கப்படும் பயிர்க் கடன்கள், சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன்கள் போன்றவை கல்லணைக் கால்வாய் கோட்டம், மானாவாரி பகுதி விவசாயிகளுக்கு பொருந்தாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், குறுவை பருவ மகசூலில் அரசின் இலக்கை எட்ட இந்தப் பகுதி விவசாயிகளின் நெல் உற்பத்தியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேலஉளூர் ஜெகதீசன் கூறியது: குறுவை பாசனத் துக்கு கல்லணையில் தண்ணீர் திறக்கும்போதே, கல்லணைக் கால்வாய்க்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிவரை சென்று சேர முன்பு மாதக்கணத்தில் ஆனது. அதனால், சாகுபடி காலதாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது, 10 நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு சென்றுவிடுவதால், இந்த தண்ணீரை நம்பி பம்புசெட் மூலம் இப்பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடி பணிகள் தொடங்கிவிடுகின்றன. ஆனால், அரசு வழங்கும் பயிர்க் கடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டப் பயன்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, கல்லணைக் கால்வாய் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்படும் சாகுபடியையும் குறுவை பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொண்டு, பயிர்க்கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த வேளாண் வல்லுநர் வ.பழனியப்பன் கூறியது: கல்லணைக் கால்வாய் பகுதி ஒருபோக நெல் சாகுபடி தான் என முன்பு இருந்தது. தற்போது, பம்புசெட் அதிகளவில் வந்துள்ளதால், அந்தப் பகுதியிலும் குறுவை சாகுபடி செய்கின்றனர். எனவே, இந்த விவசாயிகளுக்கும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்களின் பயன்களை வழங்குவதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் பரப்பளவையும் குறுவை கணக்கில் கொண்டுவர அரசு முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த கோரிக்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்” என தெரிவித்தனர்.