Last Updated : 27 Jun, 2021 06:50 PM

 

Published : 27 Jun 2021 06:50 PM
Last Updated : 27 Jun 2021 06:50 PM

கரோனா சமயத்தில் வேலைவாய்ப்பு தந்த கரிமூட்டத் தொழில்; ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வருவாய்

மானாமதுரை ரயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக சரக்கு ரயிலில் கரிமூடைகளை அடுக்கி வைத்த தொழிலாளர்கள்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் கரிமூட்டம் தொழில் கரோனா சமயத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்ததோடு, ரயில்வேக்கு மட்டும் ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கரிமூட்டத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பல ஆண்டுகளாக கரிமூட்டத் தொழில் செய்து வருகின்றனர்.

சீமைக்கருவேல மரங்களை வெட்டி தரம் வாரியாக பிரித்து களிமண்ணால் மூடி தீவைக்கின்றனர். ஒரு வாரம் கழித்து தண்ணீரை ஊற்றி மூட்டத்தை அணைத்து கரிகளை பிரித்தெடுக்கின்றனர். அவற்றை தூள்கரி, தூர்கரி, உருட்டுகரி, குச்சிகரி, மண்கரி என, 5 வகையாக தரம் பிரிக்கின்றனர். தரத்திற்கு ஏற்ப ஊதுபத்தி, கொசுவர்த்தி தயாரிக்கவும், உணவகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், சிமென்ட் ஆலைகள், பட்டறைகளிலும் பயன்படுகின்றன.

கரோனா ஊரடங்கால் பலர் தொழில் வாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கினர். கரிக்கு தேவை இருந்ததால், மானாமதுரை, காளையார்கோவில் பகுதிகளில் கரிமூட்டத் தொழில் தொடர்ந்து நடைபெற்றது. இதனால், அங்கு பணிபுரிந்தோருக்கு தொடர்ந்து பணி கிடைத்தது. மேலும், இங்கு கொள்முதல் செய்யப்பட்ட 5,000 டன் கரிகள் சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்காளம், அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம், ரயில்வேக்கு ரூ.1.50 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து, மானாமதுரை மனோஜ்குமார் கூறுகையில், "கரிமூட்டத் தொழில் செய்வதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், சீமைக்கருவேல மரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன. இதனால் கரிமூட்டத் தொழில் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. மழைக்காலங்களில் மட்டும் தொழிலில் சற்று பாதிப்பு ஏற்படும். மழை இல்லாவிட்டால் தொடர்ந்து கரிமூட்டம் இடுவோம்.

மேலும், மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் கரியில் கார்பன் அளவு அதிகமாக இருப்பதால், வெளிமாநிலங்களில் கிராக்கி உள்ளது. ஒரு டன் கரி தரத்திற்கு ஏற்ப ரூ.13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையாகிறது. அரசு அனுமதி கொடுத்ததால் கரோனா சமயத்திலும் கரிமூட்டத் தொழில் தொடர்ந்து நடைபெற்றது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x