Last Updated : 27 Jun, 2021 04:13 PM

 

Published : 27 Jun 2021 04:13 PM
Last Updated : 27 Jun 2021 04:13 PM

ஐம்பது நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு: 'இந்திய ஒன்றியம்' என்று கூறி பொறுப்பேற்ற பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள்

புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்கள் பங்கீட்டில் இழுபறி, பாஜக பரிந்துரை செய்த பட்டியலில் மாற்றம், என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் தேர்வில் தாமதம் ஆகியவற்றால் அமைச்சரவை பதவியேற்பில் இழுபறி ஏற்பட்டது.

ரங்கசாமி முதல்வராக மே7ம் தேதி பதவியேற்றார். அதைத்தொடர்ந்து 50 நாட்களாகியும் அமைச்சரவை அமையாமல் இருந்தது. இறுதியில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு என்ஆர்.காங்கிரசில் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பரிந்துரைக்கப்பட்டனர். அமைச்சர்கள் பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

கரோனா சூழல் காரணமாக புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகை முன்பு மேடை அமைத்து இன்று மதியம் நடந்தது. தேசியகீதத்துடன் விழா தொடங்கியது. தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உத்தரவை வாசித்தார். தொடர்ந்து பதவியேற்பு விழா நடந்தது. முதலில் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் பதவியேற்றார். தொடர்ந்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவை சேர்ந்த சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அனைவருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை தமிழ்மொழியில் செய்து வைத்தார்.

ஒன்றியம் எனச்சொல்லி பதவியேற்பு

முதலில் ஆளுநர் வாசிக்க அமைச்சர்கள் பதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். அப்போது, "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தெரிவிக்க, அதை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் என்று கூறி பதவியேற்றனர். குறிப்பாக, " இந்திய ஒன்றியம்" என்று ஆளுநர் கூற அதை பதவியேற்ற அமைச்சர்களும் திருப்பிக்கூறினர்.

தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா நிறைவு பெற்றது. அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியான அதிமுக, பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர். அமைச்சர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் விழாவில் பங்கேற்றனர்.

கரோனா காரணமாக விழாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சட்டப்பேரவையில் உள்ள தங்களின் அறைகளுக்கு சென்று இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக்கொண்டனர். அங்கு அமைச்சர்களின் ஆதரவாளர்கள், தொகுதி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பின்போது முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் ஆசி பெற்றனர். நிகழ்வில் தமிழக பாஜகத்தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x