

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறி வருவதால், ரூ.100ஐ நெருங்கி உள்ளது. இதற்கிடையே, 25 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் உட்பட 5 மாநிலசட்டசபைத் தேர்தல் நடைபெற்றதையடுத்து, பெட்ரோல், டீசல்
விலை உயராமல் ஒரே நிலையாக விற்பனை ஆகி வந்தது.
இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன்படி, நேற்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.19-க்கும், டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.93.23-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டிவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.