

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (53). விவசாயி. தென்னை, வெங்காயம், சோளம் உள்ளிட்டவற்றை சுமார் இரண்டரை ஏக்கரில் பயிட்டு, விவசாயம் செய்து வந்தார். மனைவி கவிதா. தம்பதிக்கு 2 மகள்கள். பள்ளியில் படித்து வருகின்றனர்.
கனகராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர். கனகராஜின் தந்தை ரெங்கசாமி. விவசாயத் தேவைக்காக, கேத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றிருந்தார். கனகராஜ் சாட்சி கையெழுத்திட்டிருந்தார்.
ரெங்கசாமி 2017-ம் ஆண்டில் உயிரிழந்தார். இதையடுத்து தந்தை பெற்ற கடனை, திரும்பச் செலுத்துவதாக கனகராஜ் வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். இந்த மாத ஆரம்பத்தில் கனகராஜ் சிறுநீரக சிகிச்சை தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அதே வங்கியில் உள்ள தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றார். அப்போது, பணம் எடுக்க முடியாத வகையில், அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். முடக்கப்பட்ட கணக்கு விடுவிக்கப்படாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகராஜ் நேற்று முன்தினம் இறந்தார்.
இது தொடர்பாக கனகராஜின் சகோதரர் சண்முகம் கூறியதாவது: எங்கள் பகுதி விவசாயி தங்கவேல், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி ஆகியோருடன் நான் வங்கிக்கு சென்று முறையிட்டோம். இதையடுத்தும் முடக்கப்பட்ட கணக்கு விடுவிக்கப்படவில்லை. இதில் கனகராஜ் கடும் மன உளைச்சல் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் என அனைவரும் சேர்ந்து, ரூ. 3 லட்சம் கடன் பெற்று, சிகிச்சைக்கு செலவு செய்தோம். எனினும், நேற்று முன்தினம் திடீரென உறுப்புகள் செயலிழந்து இறந்தார். 3 முறை நேரில் சென்று, வங்கியில் கெஞ்சிப் பார்த்தோம். வங்கித் தரப்பில் மனிதநேயமற்ற செயலை செய்துள்ளனர் என்றார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறும்போது, ‘‘விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம், கரோனா பெருந்தொற்று காலம் மற்றும் உடல் உபாதை உள்ளிட்ட காரணங்களால், தந்தை பெற்ற பயிர்க்கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். கேத்தனூர் வங்கி கிளை மேலாளரிடம் எவ்வளவோ சொல்லியும், ஒரு விவசாயியின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. பள்ளி செல்லும் 2 குழந்தைகள் இருப்பதால், கனகராஜின் குடும்பத்துக்கு வங்கி நிர்வாகம் ரூ.75 லட்சம் நிவாரணம் தர வேண்டும். மேலும் வங்கி மேலாளர் மீது, சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அரசு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும்’’ என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி. அலெக்சாண்டர் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியை, ஆட்சியர் அழைத்து விசாரிக்க உள்ளார்’’ என்றார்.