

வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாமக மாநில துணை பொதுச் செயலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா, சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கும்பகோணத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக, திருவிடைமருதூரைச் சேர்ந்த ரவுடி லாலி மணிகண்டன் உள்ளிட்டோரை திருவிடைமருதூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ம.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் 4 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில், சிறையில் உள்ள லாலி மணிகண்டனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் சிறையில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
அப்போது, ம.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதில் பாமக மாநில துணை பொதுச் செயலாளராக உள்ள கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர்.வெங்கட்ராமனுக்கு(42) தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கட்சி முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்ததால் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.