

மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, கூடுதல் கட்டணம் என்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ பணியாளர்களுடன் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டு உள்ள அவசர கால மேலாண்மைக் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது நபர் கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே, அவரது உறவினர்கள் 7 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவரை சந்தித்து, சிகிச்சை அளித்தது தொடர்பாக வும், கட்டணம் தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை திட்டி, கீழே தள்ளிவிட்டு, அவரது செல்போனை பறித்துக்கொண்டு வெளியேறினர்.
இதைப் பார்த்த மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர், அவர்களை துரத்திப் பிடித்தார். அவரையும் சரமாரியாக தாக்கி, செல்போனை தரையில் வீசி உடைத்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. நோயாளிகளின் உறவினர்களின் சோகம், கோபமாக மாறி மருத்துவப் பணியாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இத்தகைய மோதல்களை தவிர்க்கும் வழிகள் குறித்து இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தமிழ்நாடு கிளைச் செயலர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார் கூறியதாவது: தங்களது சிகிச்சையின்கீழ் உள்ள எந்த ஒரு நோயாளியும் உயிரிழப்பதை மருத்துவர்கள் விரும்ப மாட்டார்கள். கடைசிவரை எப்படி காப்பாற்றுவது என்றே முயற்சிக்கிறோம். அதை மீறி, சில உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பல இடங்களில் பணம் செலுத்துவதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது. ஏ1, ஏ2 தர மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய கிசிச்சைக்கு, நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. நோயாளி 20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தால், அதற்கே ரூ.4 லட்சம் செலவாகும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே நோயாளிகளிடம் பெற வேண்டும் என சங்கம் சார்பாகவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
புகார்களுக்கு தீர்வு காணக் குழு
சில மருத்துவமனைகள் மீது புகார்கள் இருக்கலாம். அவற்றுக்கு சுமூக தீர்வு காண சங்கத்தின் சார்பில் மாவட்டம்தோறும் அவசர கால மேலாண்மைக் குழு (crisis management committee) உள்ளது. எனவே, மருத்துவ பணியாளர்களுடன் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, இந்த குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். புகார் பெற்ற பிறகு, நேரடியாக தொடர்புடைய இடத்துக்கே சென்று அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். நோயாளிகளின் உறவினர்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு அங்கேயே உரிய விளக்கம் அளிக்கப்படும். இருதரப்பினரிடமும் பேசி சூழ்நிலையை புரிந்துகொண்டு, பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும். சங்கத்தின் https://imatn.com/ என்ற இணையதளத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் உள்ளன. ஏதேனும் புகார்கள் இருந்தால் அதில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறும்போது, “மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீதான புகார்கள், மருத்துவ சேவையில் குறைபாடு, அதிக கட்டணம் உள்ளிட்டவை குறித்து அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் contact@tamilnadumedicalcouncil.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ புகார் தரலாம். ஆண்டுக்கு சராசரியாக 80 முதல் 100 புகார்கள் வருகின்றன. ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும்" என்றார்.
சட்டங்கள் சொல்வது என்ன?
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகள் மீதான வன்முறையில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'தமிழ்நாடு மருத்துவ சேவை புரிவோர் மற்றும் மருத்துவ சேவை புரியும் நிறுவனங்கள் மீதான வன்முறை, இழப்பு, சொத்துக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம்' 2008-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, வன்முறையில் ஈடுபடுவது, தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க முடியும். குற்றம் புரிந்தவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது. நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துகள் சேதத்துக்கான இழப்பீடு வழங்க வேண்டும். கொள்ளை நோய்கள் (திருத்த) சட்டம் 2020-ன்படி மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவோர், சொத்துகளை சேதப்படுத்துவோர் ஜாமீனில் வெளி வர முடியாது. 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்படும்.