

‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தைக்கு நான் எதிரானவன் இல்லை என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த, தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். அப்போது, ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் முழங்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பின்னர் பின்பற்றி பேசினார். இந்தியர்களின் ஒருங்கிணைந்த உணர்வை, தேசப்பற்றை வெளிப்படுத்தும் வாக்கியமான ஜெய்ஹிந்த் என்பதை பற்றியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்பது போலவும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பாஜக கட்சியினர், இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நான் வெறுக்கவில்லை
இதுதொடர்பாக ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறும்போது, ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நான் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறுப்பவனும் இல்லை. நான் கூறியது வெறுப்பின் வெளிப்பாடு என்ற பாஜக உள்ளிட்டோரின் புரிதலே தவறானது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளில் இரண்டு ஆளுநர்களின் உரையையும் நான் ஒப்பீடு செய்துள்ளேன். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையில், இதுவரை இந்தி வார்த்தைகள் வந்தது இல்லை. ஆனால், கடந்த முறை ‘ஜெய்ஹிந்த்’ என்ற இந்தி வார்த்தையை போட்டுள்ளனர். அதை ‘வெல்க பாரதம்’ என போட்டு இருக்கலாம். ஆனால், தற்போதைய திமுக அரசு அமைந்த பின்னர், பழைய நடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். நன்றி, வணக்கத்தோடு நிறுத்தி உள்ளனர்.
தமிழர்கள் இந்தியையோ, மற்ற மொழிகளையோ வெறுப்பவர்கள் அல்ல. ஆனால், திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆளுநர் உரையில் இதுவரை இல்லாமல், கடந்தமுறை, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை பதிவிடப்பட்டு இருந்தது திணிப்பை போலத்தான். அந்த திணிப்பை இந்த அரசு செய்யவில்லை. நான் ஒப்பிட்டு கூறியதை, பாஜக உள்ளிட்டோர் தவறாக புரிந்து கொண்டனர். இதுகுறித்து சட்டசபையிலேயே கேட்டிருந்தால் நான் விளக்கமளித்து இருப்பேன். அதை விட்டுவிட்டு, தற்போது அவதூறு பரப்புகின்றனர். சட்டசபையில் நான் பேசியது ஜெய்ஹிந்த் மீது உள்ள வெறுப்பை தெரிவிப்பதாக இல்லை. அது மொழி சார்ந்தது என அங்கிருந்தோர் புரிந்து கொண்டனர்.
நாட்டுப் பற்று எல்லோருக்கும் உள்ளது. என் நாட்டுப்பற்று எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு நான் எதிரானவன் அல்ல. அந்த வார்த்தையில் உள்ள வீரம், உணர்வு எனக்கும் தெரியும். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவினர் மலிவு அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி கூறியதாவது:
சுதந்திரத்துக்கான குரல்
ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து, ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசியது மிக தவறானது. தமிழகத்தின் செண்பகராமன் இந்த வார்த்தையை உருவாக்கி பிரபலப்படுத்தியவர்.
ஜெய்ஹிந்த் என்றால், தேசத்தின் பெருமையை கூறுவதாகும். சுதந்திரத்துக்காக எழுப்பப்பட்ட குரல். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உச்சரிக்கும் வார்த்தை. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் வார்த்தை ஜெய்ஹிந்த். ஜெய்ஹிந்த் நாடு முழுவதும், எல்லோருக்கும் பொதுவான வார்த்தை.
மொழியை பற்றி அங்கு ஈஸ்வரன் குறிப்பிடவில்லை. அவர் மீண்டும் இதே தவறை செய்யக்கூடாது. சட்டப்பேரவை உறுப்பினர், இறையாண்மைக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் இவ்வாறு பேசியிருக்கக்கூடாது. இந்த விவகாரத்தை வைத்த பாஜக மலிவு அரசியல் செய்யவில்லை. பாஜக மட்டுமல்ல, ராணுவத்தினர், அரசியல் சார்பு இல்லாதவர்களும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது தவறை சுட்டிக்காட்ட வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.