Published : 19 Jun 2014 09:56 AM
Last Updated : 19 Jun 2014 09:56 AM

காடுகளில் சத்தமில்லாமல் ஊடுருவிய பசுமை பாலைவனம்: வனவிலங்குகள் இடம் பெயர்வு மற்றும் மரணத்துக்கு இதுவே காரணம்

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை வளர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை இந்த மரங்களை வெட்டி பயன்படுத்தினர். சுதந்திரத்துக்குப் பின்னரும், தமிழக வனத்துறை இந்த மரங்களை 2006-ம் ஆண்டு வரை வெட்டி அப்புறப்படுத்த டெண்டர் விட்டு வந்தது.

அதன்பின், இந்த மரங்கள் வெட்டப்படாமல் விடப்பட்டதால், இயற்கையான சோலைக் காடுகளை அழிக்கும் அளவுக்கு தற்போது இந்த பைன், வேட்டில், தைலமரங்கள் அடர்ந்து வளர்ந்துவிட்டன.

18 ஆயிரம் ஹெக்டேரில் பரவிய பசுமை பாலைவனம்

கொடைக்கானல் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இதில் 18 ஆயிரம் ஹெக்டேர் பைன், வேட்டில் மற்றும் தைலமரங்கள் அடர்ந்து சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ளன.

நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும், இந்த வகை மரங்கள் தண்ணீரை உறிஞ்சி விரைவாக வளரக் கூடியவை. அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் வறண்டு அப்பகுதியில் மற்ற தாவரங்கள், மரங்கள் வளராத சூழல் ஏற்படும். மழைப்பொழிவும் குறைந்துவிடும். அதனால், புல்வெளிகள் அழிந்து வறட்சி ஏற்பட்டு தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் அதிக அளவு இயற்கை மரணம் அடைகின்றன. அடிக்கடி காடுகளை விட்டு இடம்பெயரவும் செய்தன.

கொடைக்கானலில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 30 காட்டு மாடுகள் இயற்கை மரணம் அடைந்துள்ளன. இந்நிலையில் சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், தமிழக காடுகளில் உள்ள தைலமரம், பைன் மற்றும் வேட்டில் உள்ளிட்ட செயற்கை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, சமீபத்தில் தமிழக வனத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் வெளியேறுவதை உடனே தடுக்க வேண்டும், தைலமரம், பைன், வேட்டில் உள்ளிட்ட செயற்கைக் காடுகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாதந்தோறும் அறிக்கை தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனப் பகுதியில் இருந்து வெளியேறி உணவைத் தேடி மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

கொடைக்கானல் வனப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள பைன், வேட்டில், தைல மரங்கள்.

பசுமை பாலைவனத்தை அழிக்க குழு அமைப்பு

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கொடைக்கானல், நீலகிரி, தேனி, முண்டந்துறை, களக்காடு மற்றும் ஆனைமலையில் பைன், தைல மரம், வேட்டில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல், ஊட்டி மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் மற்றும் ஊட்டி மண்டல வனப் பாதுகாவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறும்போது, “தைலம், பைன், வேட்டில் மரங்களை பசுமை பாலைவனம் என்றே கூறலாம். இந்த பசுமை பாலவனம் எந்தளவுக்கு காடுகளில் ஊடுருவியுள்ளது, இவற்றால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சினை, இம்மரங்களை வெட்டி அப்புறப்படுத்த எவ்வளவு நாள் ஆகும், வெட்டியபின் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள பைன், வேட்டில், தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x