

சேலத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாரை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் இந்து முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு போலீஸார் ரூ.200 அபராதம் விதித்தனர். இந்நிலையில், சிறிது நேரத்தில் அங்கு வந்த சூரமங்கலம் பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர் செல்லபாண்டியன், அபராதம் செலுத்திய இளைஞருக்கு ஆதரவாக பேசியதோடு, போலீஸாரை மிரட்டியுள்ளார். அவர் மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில், செல்லபாண்டியன், “டூட்டி போட்டா சும்மா வந்து உட்கார்ந்துட்டு போகணும், வழக்கு போடக்கூடாது. கரோனாவில் இருந்து நீங்க தான் காப்பாத்த போறீங்களா” எனக் கூறுவதோடு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.
இதையடுத்து, செல்லபாண்டியன் மீது, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்து முன்னணியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஸ்குமார் அறிவித்துள்ளார்.