

செங்கை மாவட்டத்தில் மின்தடை ஏற்படாமல் தடுக்கும் வகையில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின் கட்டமைப்புகளில், மின் கம்பிகளுக்குஅருகிலுள்ள மரங்களின்கிளைகளை அகற்றியும், பழுதான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, மின் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், பருவமழை தொடங்க உள்ளதால், மழை, காற்றால், மின் விநியோகத்தில் பாதிப்புஏற்படுவதைத் தடுக்கும் வகையில்மின் வாரியத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.மனோகரன் (பொறுப்பு)கூறும்போது, “தங்கு தடையின்றி மின் விநியோகத்தை மேற்கொள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு, மறைமலைநகர், திருப்பெரும்புதூர்மற்றும் திருமழிசை கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளமின் பாதைகளில் கடந்த 19-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின்போது இதுவரை சுமார் 3,000 இடங்களில்மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.
60 இடங்களில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் சரி செய்யப்பட்டு 100 புதிய மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல 110/11கேவி மற்றும் 33/11 கேவி திறன் கொண்ட 17 துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பழுதடைந்த மின் சாதனங்கள் மாற்றப்பட்டுள்ளன” என்றார்.