Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM

கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: இந்து மக்கள் கட்சியின் தலைவர் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்

தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தோல்விஅடைந்துவிட்டது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கரோனா நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் பங்கேற்க வந்திருப்பதாக தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த வாரங்களில் கோயில்களை திறக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு பலன் கிடைத்துள்ளது. கோயில்களைத் திறந்தால் அங்கே மக்களுக்கு நிவாரணமாக உணவு பொட்டலங்கள், கபசுரக் குடிநீர் போன்றவற்றை வழங்கலாம். தமிழக அரசின் கோயில் திறக்கும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் தற்போதுள்ள தமிழக அரசுதோல்வி அடைந்துவிட்டது. முதல்அலையின்போது தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசுகரோனாவை விட வேகமாக செயல்பட்டு அதைக் கட்டுப்படுத்தியது. ஆனால் திமுக அரசு ஊரடங்கு நடவடிக்கையை முறையாக அமல்படுத்தாமல் கரோனா பரவலுக்கு வழி வகுத்துவிட்டது.

திமுகவினர் எதுவாக இருந்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி இந்தியாவில் 18 வயதுமுதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு இந்தியாவை ஒன்றியம் என்று சொல்வது, மோடி எதிர்ப்பு, எட்டு வழிச்சாலையை எதிர்ப்பது என்ற வகையில் அரசுசெயல்படக் கூடாது. ஸ்டெர்லைட்பிரச்சினையில் கலவரம் செய்ய முயன்றவர்கள் மீது வழக்கை திரும்பப் பெற்றது சரியல்ல.

ஆட்சிக்கு வருவதற்கு முன், பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம்வழங்கப்படும், பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x