Published : 16 Dec 2015 10:04 PM
Last Updated : 16 Dec 2015 10:04 PM

அர்ச்சகர்கள் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா?- கருணாநிதி பதில்

ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது என்பதிலே திமுகவுக்கு அழுத்தமான கொள்கை உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் இன்று அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். கி. வீரமணியும் எங்களைப் போலவே குரல் கொடுத்து வருகிறார்.

அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்து பேசி எந்த வகையிலே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு முடிவு செய்வோம்.

ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழுத்தமான கொள்கை உண்டு. அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்வோம்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுமா? மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டதற்கு, "உரிய நேரத்தில் உரிய முறையில் யோசித்து செயல்படுவோம்" என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x