Published : 27 Jun 2021 03:15 AM
Last Updated : 27 Jun 2021 03:15 AM

ராஜபாளையம்- புளியரை நான்குவழிச் சாலைக்கு மாற்றுப்பாதை சாத்தியமில்லை எனக் கூறுவதா?- திட்ட விளக்க கூட்டத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள்

ராஜபாளையம்- புளியரை நான்குவழிச் சாலை திட்டம் குறித்த விளக்க கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி

ராஜபாளையம்- புளியரை நான்குவழிச் சாலையை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், திட்ட விளக்க கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறினர்.

திருமங்கலம்- கொல்லம் சாலைக்கு பதிலாக நான்குவழிச் சாலை அமைக்க கடந்த 2018 நவம்பர் மாதம் நெடுஞ்சாலைத்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. திருமங்கலம்- ராஜபாளையம், ராஜபாளையம்- புளியரை, புளியரை- பாலருவி என, மூன்று பகுதிகளாக இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாம் பகுதியில் விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம், புத்தூர், தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லுர் மேற்கு, புளியங்குடி கிழக்கு, வடகரை வழியாக புளியரை வரை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், புத்தூரில் இருந்து புளியரை வரை முழுமையாக விவசாய நிலமாக இருப்பதால், இந்த வழியாக சாலை அமைக்கக் கூடாது என்றும், விவசாய நிலங்கள் பாதிக்காதவாறு மாற்றுப் பாதையில் சாலை அமைக்க வேண்டும் என்றும், அல்லது தற்போது உள்ள சாலையையே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் என்எச் 744 நஞ்சை மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மாற்றுப் பாதைக்கான வழிமுறைகளையும் தெரிவித்தனர்.

பலகட்ட போராட்டங்கள்

விவசாயிகள் எதிர்ப்பால் சாலை நில அளவைப் பணி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு, 2019 நவம்பர் மாதம் காலாவதியானது. புதிதாக அமைய உள்ள சாலை விளைநிலங்கள் வழியாகவும், தற்போது உள்ள சாலையை விட அதிக தூரம் இருப்பதாலும், வன உயிரினங்கள் நடமாடும் பகுதி வழியாக செல்வதாலும் மாவட்ட தலைநகரான தென்காசி, சுற்றுலா தலமான குற்றாலத்தை இணைக்காமல் செல்வதாலும் மாற்றுப் பாதையில் அமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தி, அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

விளக்க கூட்டம்

இந்நிலையில், இத்திட்டம் குறித்த விளக்க கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநர் வேல்ராஜ், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், “ ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி மட்டுமே நான்குவழிச் சாலை அமைக்க முடியும்.

இந்த சாலையை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது சாத்தியமில்லை. எதிர்ப்பு காரணமாக திட்டத்தை செயல் படுத்த முடியாமல் உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வழியில் திட்டத்தை செயல் படுத்த அறிவிப்பு வெளியிட தயாராக உள்ளோம்” என்றனர்.

கடும் எதிர்ப்பு

இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். “ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் சாலை அமைத்தால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யலாம். பழையபடியே திட்டத்தை செயல்படுத்த முயன்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து சென்றுவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x