மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததால் சிறிய மீன்களின் வரத்து அதிகரிப்பு: வஞ்சிரம், இறால் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததால் சிறிய மீன்களின் வரத்து அதிகரிப்பு: வஞ்சிரம், இறால் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்
Updated on
1 min read

மீன்பிடித் தடைக்காலம் நீங்கியதை யடுத்து,சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், வஞ்சிரம், வவ்வால், இறால் ஆகிய மீன்கள் கிடைக்காததால், அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி நள்ளிரவில் இருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் சிலர் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரை திரும்பினர். தடைக்காலம் முடிந்தது முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும் என்றும் விலை குறைவாக இருக்கும் என்றும் கருதி ஏராளமானோர் காசிமேட்டில் குவிந்தனர்.

ஆனால், மக்கள் அதிகம் விரும்பும் வஞ்சிரம், வவ்வால், ஷீலா, நண்டு, இறால் போன்ற மீன்கள் அதிகம் விற்பனைக்கு வரவில்லை. அதற்குப் பதில் சிறிய ரக மீன்களான காரப்பொடி, சின்ன சங்கரா, மத்தி, மடல், வாளை, முரல், கானாங்கத்தை போன்ற மீன்களே அதிக அளவு விற்பனைக்கு வந்தன. இதனால், அசைவப் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து, காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் ரவி, `தி இந்து’விடம் கூறியதாவது:

கடலில் குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடிப்பவர்கள் மட்டுமே இப்போது மீன்பிடிக்கச் சென்றனர். இதனால், சிறிய ரக மீன்கள் மட்டுமே கிடைத்தன. மக்கள் அதிகம் விரும்பும் வஞ்சிரம், வவ்வால், இறால் போன்ற மீன்கள் அடுத்தவாரம் முதல் வரத் தொடங்கும்’’ என்றார்.

திருவொற்றியூரில் இருந்து மீன் வாங்க வந்திருந்த ஜீவா என்பவர் கூறுகையில், “மீன்பிடித் தடைக்காலம் நீங்கியதையடுத்து, அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று நினைத்து வந்தேன். ஆனால் சிறிய ரக மீன்கள் தான் அதிகமாய் வந்துள்ளன. நான் விரும்பி சாப்பிடும் வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்றார்.

மீன்களின் விலை

சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை ஓரளவு குறைந்திருந்தது. திருக்கை கிலோ ரூ.100க்கும், கிழங்கா கிலோ ரூ.80 முதல் 110க்கும், காரப் பொடி கிலோ ரூ.60 முதல் 75க்கும், மத்தி மற்றும் மடல் மீன்கள் கிலோ ரூ.30 முதல் ரூ.50க்கும், வாளை ரூ.70 முதல் ரூ.100க்கும் விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in