

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில், ஆதார் அட்டையில் அப்பகுதி முகவரி உள்ளவர்களுக்கு மட்டுமே இன்று டோக்கன் வழங்கப்பட்டதால் அதிகாலை முதல் காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவையில் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியின மக்கள், பொதுமக்களுக்கு இன்று தடுப்பூசிகள் போடப்பட்டன. மாநகராட்சிப் பகுதிகளில் 53 மையங்களிலும், ஊரகப் பகுதிகளில், 16 இடங்களிலும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதில், கோவை மதுக்கரை வட்டாரத்திற்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 தடுப்பூசிகள் போடப்படும் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு அதிகாலை முதலே பொதுமக்கள் டோக்கன் பெறுவதற்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், அந்தப் பேரூராட்சி சார்பில் ஆதார் கார்டில் ஒத்தக்கால் மண்டபம் என முகவரியில் இருப்பவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும், மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படாது என்றும், அவரவர் பகுதிகளில் அமைக்கப்படும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆதார் கார்டில் ஒத்தக்கால் மண்டபம் என முகவரி இல்லாதவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும், தடுப்பூசிக்கான டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையத்திலும் இதேபோன்ற பிரச்சினை எழுந்தது. தடுப்பூசி தேவைக்கும், செலுத்தப்படும் எண்ணிக்கைக்குமான இடைவெளி தொடர்வதால், எங்கேயாவது தடுப்பூசி கிடைக்காதா என மக்கள் தினமும் பல கி.மீ. தூரம் அலைந்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆதார் அட்டையில் தடுப்பூசி செலுத்தப்படும் பகுதியின் முகவரி உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்ற நடைமுறை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.