Published : 26 Jun 2021 06:20 PM
Last Updated : 26 Jun 2021 06:20 PM

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம்; ஏசி வசதியுடன் 7 தளங்கள்: இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இடம் தேர்வு செய்வதற்காக ஆய்வு செய்தனர்.

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மதுரை நகர்ப் பகுதிகளில் 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அதில் எந்த இடத்தில் நூலகம் அமைக்கலாம் என்பது குறித்து தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

மதுரை மாட்டுதாவனி பேருந்து நிலையம் அருகே உள்ள நிலம், உலக தமிழ்ச்சங்க வளாகம், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அருகில் உள்ள இடம், மாநகராட்சி பொது பண்டக சாலை, எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலை உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில் 6 இடத்தையும் இன்று அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக 6 இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக வந்து செல்லும் வகையிலும் சாலை வசதி கொண்ட இடம் தேர்வு செய்யப்படும். முழுவதும் குளிரூட்டப்பட்ட 7 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூலகம் அமைய உள்ளது. 24 பகுதியாக பிரிக்கப்பட்டு நூலகம் அமைய உள்ளது

ஒரே நேரத்தில் 600 வாசகர்கள் அமர்ந்து வாசிக்கும் வகையில் நூலகம் அமைக்கப்டுகிறது

கலைஞர் நூலகம் அமையும் இடத்தை முதல்வர் தேர்வு செய்வார்.

இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழாக வாழ்ந்த கலைஞருக்கு நூலகம் அமைவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x