Published : 26 Jun 2021 05:51 PM
Last Updated : 26 Jun 2021 05:51 PM

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கரும், நோபலும் வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் 

மதுரை

"மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவதைப் பார்த்தால், அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளுக்குச் சென்ற அணில்கள் தற்போது திரும்பிவந்து மின்தடையை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. அவரது கண்டுபிடிப்பிற்கு ஆஸ்கர், நோபல் பரிசு வழங்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் மாணவர் அணிக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து மாணவர் சமுதாயத்தை திமுக நம்பவைத்து ஏமாற்றியுள்ளது. தற்போது திமுகவின் இளைய சூரியனாகக் காட்சி கொடுக்கும் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதி கூறினர்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளித்தது. தற்போது அந்த திட்டத்தைப் பற்றி இந்த அரசு எதுவும் சொல்லாமல் உள்ளது. அதேபோல அதிமுக அரசு கொண்டுவந்த விலையில்லா மடிக்கணினி, சத்தான உணவு, 14 வகையான பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக அமைச்சர்கள் என்னை விஞ்ஞானி எனக் கூறுவர். ஆனால், தற்போது புதிய கண்டுபிடிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்தடைக்கு அணில்தான் காரணம் என்று புதிதாகக் கண்டுபிடித்துள்ளார். அவர்தான் உண்மையான விஞ்ஞானி. செந்தில் பாலாஜியால் தற்போது ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் இருந்து நான் தப்பித்தேன்.

எங்கள் ஆட்சியில் வெளிநாடுகளுக்குச் சென்ற அணில்கள், தற்போது திரும்பிவந்து மின் மற்றும் இரும்புக் கம்பிகளில் செல்வதாகக் கூறுகிறார்கள். அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கர் விருது, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையைக் குறைப்போம் எனச் சொன்னார்கள். மதுரையைச் சேர்ந்த நிதியமைச்சர் தினமும் புதுசு புதுசாகப் பேசுகிறார். ஆனால், எதுவும் மக்கள் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பாக இல்லை. தற்போது எப்போது பெட்ரோல் விலையைக் குறைப்போம் எனச் சொன்னோம் என்று கூறினார்.

திமுகவை உண்மையான மான் என நினைத்து மக்கள் பொய் மானைக் கண்டுள்ளனர். கரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதா எனத் தெரியவில்லை. கரோனாவை ஒழித்தோம் என அவர்களை அவர்களே பாராட்டிக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா உச்சமாகப் பரவியபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் ஆய்வு செய்தார். அதனால், பிரதமரால் பாராட்டப்பெற்றவர். மற்ற மாநிலங்களைத் தமிழகம் பின்பற்ற வேண்டும் என பிரதமர் கூறினார்.

வீண் பெருமை பேசாமல் கரோனா மூன்றாம் அலை பாதிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x