

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களையும், போட்டிச் சூழலையும் எதிர்கொள்ள ஏதுவான வகையிலும், தொடர்ந்து நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெறுவதற்கும் தமிழக அரசு உறுதுணையாக நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
“ஒவ்வொரு ஆண்டும் ஜூன் திங்கள் 27ஆம் நாள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. முன்னேற்ற நோக்கங்களை அடைவதிலும், புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதிலும், உலக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் 2017ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி கொண்டாடப்படுகிறது.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்துறைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் விளங்குகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெருந்தொழில்களுக்குத் துணையாக இருப்பதுடன் நாட்டின் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கும், சீரான வட்டார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன. தமிழ்நாடு ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் மிகத் திறமையான மனித ஆற்றலை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக மட்டுமல்லாது வாகன உதிரி பாகங்கள், இயந்திரத் தளவாடங்கள், மருந்துப் பொருட்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களின் முக்கியத் தளமாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கரோனா பெருந்தொற்று நோய் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விரைந்து மீட்டெடுக்க ஏதுவாகத் தொழில் நிறுவனங்கள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருவதுடன், சிறு கடன் பெற்றுள்ளவர்களுக்குக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களையும், போட்டிச் சூழலையும் எதிர்கொள்ள ஏதுவான வகையிலும், தொடர்ந்து நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெறுவதற்கும் ஏதுவான வகையிலும், தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளையும் எடுக்கும் என இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைந்து மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த அரசு செயல்படும். இந்த இனிய நாளில் அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.