நீலகிரியில் 8000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நீலகிரியில் 8000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் அரசு நிலம் மற்றும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகிமைராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் கிராமத்தில் உள்ள டி.ஆர்.பஜார் பகுதியில் மஹாவீர் பிளாண்டேஷன் என்ற நிறுவனம், அரசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. அதைப் பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளையும், அதை ஒட்டிய 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.

சாலையின் குறுக்கே 425 மீட்டர் நீளத்திற்குப் பெரிய அளவிலான கற்களைப் போட்டு பாதையை மறித்துள்ளதுடன், பிற சாலைகளுக்கும், வேளாண் நிலங்களுக்கும் செல்கின்ற வழிகளையும், இடுகாட்டிற்குச் செல்லும் வழியையும் மஹாவீர் பவுண்டேஷன் நிறுவனம் மறித்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நில நிர்வாக ஆணையர், நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் மகிமைராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்பு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.

மேலும், மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கான ஆவணங்களை ஆய்வு செய்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதா? எனக் கண்டறிந்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in