

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் கோயில்களுக்கு பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது.இதனால், வெளிமாநில தேங்காய் கொள்முதல் விலை குறைந்துள்ளதால், தமிழக விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தேனி உட்பட பரவலாக 4 லட்சத்து 24 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் அதிகளவு தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இங்கு உற் பத்தியாகும் தேங்காய்கள் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தினமும் விற்பனைக்குச் செல்கின்றன. கடந்த இரு ஆண்டு களுக்கு முன் மழையில்லாததால் பட்டுப்போன தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்தனர்.
தற்போது வெட்டிய இடங்களில் விவசாயிகள் மாற்று விவசாயம் செய்து வருகின்றனர். வறட்சியில் தப்பிய மரங்களில் கடந்த இரு ஆண்டுகளாக விளைச்சலும் குறைந்ததால் தேங்காய் விலை தமிழகத்தில் உயரத்திலேயே இருந்து வந்தது. அதனால், தென்னை விவசாயிகளுக்கும், வியாபாரி களுக்கும் கைமேல் லாபம் கிடைத்தது.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் தேங்காய்கள் பெரும்பாலும் கோயில் பூஜைகளுக்கே அதிகளவு செல்கின்றன. தற்போது வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் கோயில்களுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. எனவே அங்கு தேங்காயின் தேவை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திர தேங்காய் சந்தைகளில் தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.
உற்பத்தி அதிகரித்தது
அதேநேரத்தில் தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளதால் தேங்காய் விலை குறையத் தொடங்கியுள்ளது. சந்தைகளில் பெரிய தேங்காய் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்றாலும், வியாபாரிகள் உற்பத்தி அதிகரிப்பை காரணம் காட்டி 5 ரூபாய், 6 ரூபாய்க்கே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் ஆயிரம் தேங்காய்க்கு 150 தேங்காய்களை வியாபாரிகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும். ஒரு மரத்துக்கு வெட்டுக்கூலி 14 ரூபாயும், தலா 5 தேங்காய்களும் இலவசமாகவும் கொடுக்க வேண்டும். அதனால், ஒரு தேங்காய்க்கு 4 ரூபாயே கிடைப்பதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சோழவந்தானை சேர்ந்த தேங்காய் வியாபாரி சந்திரசேகர் கூறியது:
மதுரையில் இருந்து முன்பு தேங்காய் 100 லாரிகளில் வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு சென்றது. அப்போது விவசாயிகளிடம் ஒரு தேங் காய்க்கு ரூ.9 என விலை கொடுத்தோம். தற்போது வடமாநிலங்களில் வரவேற்பு இல்லாததால் வெறும் 40 லாரிகளில் மட்டுமே அங்கு தேங்காய் விற்பனைக்கு செல்கிறது. தமிழகத்தில் உற்பத்தி அதிகரிப்பை தெரிந்து கொண்ட வடமாநில வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் 5 ரூபாய்க்கே விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்கிறோம். இதனால் எங்களுக் கும் லாபம் இல்லை. சில்லறை வியாபாரிகள் மட்டுமே லாபமடைந்துள்ளனர் என்றார்.
வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்
திண்டுக்கல் மாவட்ட தென்னை உற்பத்தி யாளர்கள் சங்க செயலர் ஜெயமாணிக்கம் கூறியது: தமிழகத்தைப்போல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. வடமாநிலங்களுக்கு ஆந்திரம், கேரளத்தில் இருந்து அதிகளவு தேங்காய் செல்வதால் தமிழகத்தில் தேக்கமடைந் துள்ளன. சோழவந்தான் பகுதி விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய் தேக்கமடைவதை தவிர்க்க ஒரு காய் 5 ரூபாய், 6 ரூபாய்க்கு வட மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.
அவர்களைக் காரணம் காட்டி, மற்ற பகுதி வியாபாரிகள் 5 ரூபாய்க்கு தேங்காயைக் கொள்முதல் செய்து சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ஆனால், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் மேலும் காய்வரத்து அதிகரிக்கும். தேங்காய் விலை குறையாமல் நிலையாக இருக்க இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அந்தமானில் இருந்து இந்தியாவுக்கு தேங்காய் இறக்குமதியை மத்திய அரசு குறைக்க வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என்றார்.