Published : 26 Jun 2021 01:05 PM
Last Updated : 26 Jun 2021 01:05 PM

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் காமேஸ்வரன் மறைவு: முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

மருத்துவர் காமேஸ்வரன்: கோப்புப்படம்

சென்னை

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் ஆகிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் இன்று (ஜூன் 26) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

1923-ல் பிறந்த மருத்துவர் காமேஸ்வரன், லயோலா கல்லூரியிலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் மேற்படிப்பை வெளிநாட்டில் பயின்ற அவர், சென்னை மருத்துவக் கல்லுரியில், காது, மூக்கு, தொண்டை பிரிவின் இயக்குநராக இருந்தார். இந்தியாவில் பல்வேறு காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். தரமணியில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் அடிப்படை மருத்துவ அறிவியல் பிரிவின் இயக்குநராகவும் இருந்தார்.

அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர்:

பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் தந்தையும், பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்க மருத்துவருமான காமேஸ்வரனின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் காமேஸ்வரன் தனித்துவமிக்க காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். எண்ணற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து, தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த பெருமைக்குரியவர். தலைவர் கருணாநிதிக்கு ஈடு இணையற்ற நண்பராக இருந்தவர்.

தனது அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தந்தையை இழந்து வாடும் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ், நிறுவனர், பாமக:

புகழ்பெற்ற மருத்துவரும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப் பாடுபட்டவர்களில் ஒருவருமான காமேஸ்வரன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

ராமதாஸ்: கோப்புப்படம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களைப் பட்டியலிட்டால் அதில் தவிர்க்க முடியாதவர் காமேஸ்வரன் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்று இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் பயிற்சி பெற்ற அவருக்கு, தமிழகத்தை உலகின் சிறந்த மருத்துவ மையங்களில் ஒன்றாக உயர்த்த வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்காகக் கடுமையாக உழைத்தார். அது தொடர்பான தமிழக அரசின் முயற்சிகளுக்கு வழிகாட்டியதுடன், துணையாகவும் இருந்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ, பி.சி.ராய் உள்ளிட்ட விருதுகளையும் வென்றவர். தமிழ் மொழி, இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். மருத்துவத்தைத் தொழிலாகச் செய்யாமல் சேவையாகச் செய்தவர். என் மீது அன்பும், பற்றும் கொண்டவர். அவரது புதல்வர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நெருக்கமானவர்கள். அவர் நூற்றாண்டு விழா கொண்டாடுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது மறைவுச் செய்தியை என் போன்றவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மருத்துவர் காமேஸ்வரன் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் மோகன் காமேஸ்வரன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், சக மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x