

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் முயற்சிகளில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடத்தை 10 கோடி செலவில் கேரள அரசு அமைத்து வருகிறது.
இதற்காக ராட்சத எந்திரங்களை பயன்படுத்தி நீர் தேங்கும் பள்ளமான பகுதிகளில் மண்ணைக் கொட்டி மேடாக்கும் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக கேரள அரசின் சார்பில் கூறப்படும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆமைப் பூங்கா அருகில் தற்போது நிறுத்தப்பட்டு வருவதாகவும், அந்த வாகனங்கள் எழுப்பும் ஒலியால் கானக விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ள கேரள அரசு, இதைத் தடுக்கவே வேறு இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
வாகன ஒலியால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கேரள அரசு கருதினால், அப்பகுதியில் வாகனங்கள் வருவதற்கோ அல்லது ஒலி எழுப்புவதற்கோ தடை விதிக்கலாம். அதை விடுத்து அணையின் நீர் தேக்கப் பகுதியை மேடு ஆக்கி வாகன நிறுத்தம் அமைப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது; கடுமையாக கண்டிக்கத் தக்கது.
கேரள அரசு திட்டமிட்டுள்ளவாறு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதற்கான சுரங்கப்பகுதியில் உடைப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும். இதற்கெல்லாம் மேலாக வாகன நிறுத்துமிடத்திற்கு தண்ணீர் வந்துவிடும் என்பதை காரணம் காட்டி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கும். மொத்தத்தில் கேரள அரசின் நோக்கம் வாகன நிறுத்துமிடம் அமைப்பது இல்லை; நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுப்பது தான் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு, நீர்த்தேக்கப் பகுதிகளில் சுற்றுலா மாளிகைகளை கேரளம் கட்டியது. இதனால், நீர்மட்டத்தை எதிர்காலத்தில் 152 அடியாக உயர்த்த முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கும் முட்டுக்கட்டைப் போடுவது இருமாநில நல்லுறவுக்கு வழி வகுக்காது.
எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வசதியாக, உச்சநீதிமன்றம் அமைத்துள்ள முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணை அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.