

கிங் இன்ஸ்டிட்யூட்டில் கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளுக்கான சிகிச்சை மையம் பெரியளவில் அமைக்கப்பட்டு வருகிறது எனவும், அதனை முதல்வர் அடுத்த வாரம் திறந்து வைப்பார் எனவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 26) சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனாவுக்குப் பிந்தையை பாதிப்புகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, கிங் இன்ஸ்டிட்யூட்டில் பெரியளவில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல்வர் அதனை திறந்துவைப்பார்.
அனைத்து வட்டார, மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றின் அளவு குறைந்துள்ளதால், படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், பொது நோய்களுக்கும் முக்கியத்துவம் அளித்து டயாலிசிஸ், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் பொதுமக்களுக்கு கவனம் செலுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.