வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்க கோரி மனு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
Updated on
1 min read

வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பெரும்பான்மை யான பொதுமக்களின் நலன் இருப்பதால் அதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வுக்கு மாற்றும்படி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டார்.

காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மக்கள் தவிப்பு

வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்கவில்லை. மின் விநி யோகமும் கிடையாது. உணவு இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சொந்த வீட்டிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகள் தொடர்பாக கடந்த 4-ம் தேதி அரசிடம் மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க சிறிய அளவில் குழுக்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து, தமிழகத்தில் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அட்வகேட் ஜெனரல் அல்லது கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

உடனடி விசாரணைக்கு..

இந்நிலையில், இவ்வழக்கில் பெரும்பான்மையான பொதுமக்களின் நலன் இருப்பதால், இதை தலைமை நீதிபதியின் முதல் அமர்வுக்கு மாற்றி, 10-ம் தேதியே (இன்று) விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in