

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் உட்பட ரூ.71 கோடியே 55 லட்சம் மதிப்பிலான வருவாய்த்துறை அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தாலுகா, வீரபாண்டி கிராமத்தில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 901 சதுரடி பரப்பில், ரூ. 55 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் தரை தளம் உள்ளிட்ட 8 தளங்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வளாகத்தை நேற்று காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இவ்வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 40 துறைகளுக்கான அலுவலக அறைகள், 2 பெரிய மற்றும் 2 சிறிய கூட்ட அரங்குகள், விருந்தினர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் உள்ளன.
மேலும், வேலூர், நெல்லை, அரியலூர், ராமநாதபுரம், நாமக்கல், கரூர், காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருவாய் ஆய்வாளர் மற்றும் 23 கிராம நிர்வாக அலுவலகங்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதுதவிர சிவகங்கை, திருவாரூர், மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் துணை ஆட்சியர்கள் குடியிருப்புகள், அரசு விருந்தினர் இல்லம், தகவல் மையம், வகுப்பறைகள், அலுவலர் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
சென்னை- சேப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் அலுவலகம், தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் குறு வட்ட நில அளவருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.
ரூ. 71 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான இக்கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். மேலும், திருவள்ளூரில் ஆவடி, கிருஷ்ணகிரியில் பர்கூர், புதுக்கோட்டையில் விராலிமலை, விருதுநகரில் வெம்பக்கோட்டை, நெல்லையில் திருவேங்கடம் ஆகிய புதிய வருவாய் தாலுகாக்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், அரசு கேபிள்டிவி நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், வருவாய்த் துறை செயலர் இரா. வெங்கடேசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.