

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் பெண் ஆசிரியரின் வழக்கு விவகாரத்தில் நீதிமன்றஉத்தரவை லயோலாகல்லூரி நிர்வாகம் உடனே அமல்படுத்த வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள லயோலா கல்வி நிறுவன வளாகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் ஊடக கலைகள் துறையில் 2006-ம்ஆண்டு ஜூன் மாதம் ஆசிரியை ஒருவர் விரிவுரையாளர் பணியில் சேர்ந்துள்ளார்.
தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார்
தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த அந்த ஆசிரியர் 2009-ம்ஆண்டு பணிநிரந்தரம்செய்யப்பட்டார். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அந்த கல்லூரியில் பணிபுரியும் தமிழ்த்துறை தலைவர் எஸ்.ஆண்டனி ராஜராஜன் பாலியல் தொந்தரவுஅளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு 2012-ம்ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஆசிரியை புகார் அளித்தார். எனினும், அந்த புகாரின் மீது கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவில் ஆசிரியைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பணப்பலன்களுக்கு நிகராக இழப்பீடு வழங்கவும், பேராசிரியர் ஆண்டனி ராஜராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் கல்லூரி நிர்வாகம் அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை அறிந்ததேசிய மகளிர் ஆணையம் சூமோட்டா பிரிவில் இவ்வழக்கை தன்னிச்சையாக எடுத்துவிசாரணை நடத்தியது. அதில், ஆசிரியை மீது எந்த தவறும் இல்லை என்பதை உறுதிசெய்து, நீதிமன்ற உத்தரவை லயோலா கல்லூரி நிர்வாகம் உடனே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, லயோலா கல்லூரிக்கு அனுப்பிய கடிதம்:
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான ஆசிரியை தன் பணிகாலத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். சக ஊழியரின் மீதான அவரின் பாலியல் புகாருக்கு கல்லூரி நிர்வாகம் ஆதரவாக செயல்பட்டதால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு முடிவில் ஆசிரியைக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பேராசிரியர் ஆண்டனி ராஜராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்றிருப்பின் அவரின் ஓய்வூதிய பலன்களை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியைக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை 60 நாட்களில் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவன்முறை விவகாரத்தில் லயோலா கல்லூரிஎந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது அவற்றை அவமதிக்கும் செயலாகும். எனவே, நீண்டகாலமாக போராடி வரும் ஆசிரியைக்கு ஆதரவானநீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்திகல்லூரி நிர்வாகம் நீதியை நிலைநாட்ட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆணையத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் பெண்ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரத்தில் லயோலா கல்லூரி ரூ.64.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது..