புதுச்சேரியில் நாளை அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் நாளை அமைச்சர்கள் பதவியேற்பு
Updated on
2 min read

தேர்தலில் வென்று 55 நாட்களுக்குப் பிறகு, புதுச்சேரியில் 5 அமைச்சர்கள் நாளை (ஜூன் 27) பதவிஏற்கின்றனர். இதற்காக, ஆளுநர்மாளிகை வெளியே மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகியவற்றுடன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி நீங்கலாக மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்று சட்டப்பேரவை கூடிவிட்டது. ஆனால் புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி மட்டும் பொறுப்பேற்றிருந்த நிலையில், என்.ஆர்.காங். - பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவிகளை பெறுவதில் இழுபறி நீடித்தது. நீண்ட இழுபறிக்குப் பின்பு பாஜகவுக்கு பேரவைத் தலைவர் பதவி, 2 அமைச்சர்கள்; என்.ஆர்.காங்கிரஸுக்கு துணை பேரவைத் தலைவர் பதவி, 3 அமைச்சர்கள் பதவி என முடிவானது.

இடையில், ‘பாஜகவில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது’ என அக்கட்சியில் ஒரு சாரார்தலைமைக்கு புகார்கள் அனுப்ப, பட்டியல் உறுதி செய்வது மேலும் தாமதமானது. இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, கடந்த 23-ம் தேதி அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி அளித்தார்.

பாஜக தரப்பில் நமசிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது, என்.ஆர்.காங்கிரஸில் தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் கொண்ட பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதி புதுச்சேரி அரசுக்கு நேற்று வந்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் பதவியேற்பு நாளை மதியம் 2.30 முதல் 3.15 மணிக்குள் நடத்த பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை முதல்வர் ரங்கசாமி ஏற்றுள்ளார். ஆளுநர் தமிழிசையும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். பதவியேற்புக்காக ராஜ்நிவாஸுக்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அரசு தரப்பில் விசாரித்தபோது, “ஒவ்வொரு அமைச்சருடனும் 10 பேர், கட்சியினர், அதிகாரிகள் என மொத்தம் 100 பேர் வரை பதவியேற்பில் பங்கேற்க உள்ளனர். கரோனா சூழலைகருத்தில் கொண்டு ராஜ் நிவாஸ்வாயிலில் பந்தல் போட்டு மேடை அமைக்கிறோம்” என்றனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்

கடந்த 1980-ம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவருக்கு தற்போதுதான் புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், 2-வது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் இடம்பெற்றுள்ள நமசிவாயம் வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர், இம்முறை மண்ணாடிப்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார், தற்போது 4-வது முறையாக மீண்டும் அமைச்சராகிறார். இதேபோல் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் 3-வது முறையாக அமைச்சர்கள் ஆகின்றனர். பாஜக தரப்பில் சாய் சரவணகுமார் முதல்முறை வெற்றி பெற்று அமைச்சராகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in