கரோனாவில் கணவர் இறந்ததால் சோகம்: ஈரோட்டில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

கரோனாவில் கணவர் இறந்ததால் சோகம்: ஈரோட்டில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
Updated on
1 min read

கரோனா பாதிப்பால் கணவர் இறந்த துக்கத்தில், ஈரோட்டில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (67). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகள் நித்யா (37). இவர், கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் மகதி (11), யாதவ் கிருஷ்ணன் (6) ஆகியோருடன் சென்னை மாங்காட்டில் வசித்துவந்தனர். கடந்த மாதம் 2-ம்தேதி பாஸ்கருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 9-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து நித்யா தனது மகன், மகளுடன் ஈரோடு திண்டலில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார். நித்யாவுக்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். கணவரின் பிரிவைத் தாங்க முடியாத நித்யா,நேற்று முன்தினம் மதிய உணவில், விஷத்தைக் கலந்து தனதுகுழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார்.

நீண்ட நேரமாக அவர்களது அறைக் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பார்த்தசாரதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மூவரும் மயங்கிய நிலையில் இருந்தனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளவியல் ஆலோசனை தேவை

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிலையம் இணைந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குஉளவியல்ரீதியான ஆலோசனைகளை, தொலைபேசி (80 - 4611 0007) வாயிலாக 12 மொழிகளில் வழங்கி வருகிறது.

இதில் தமிழ் மொழியிலும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதேபோல், கரோனாவால் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்ப உறுப்பினர்களுக்கு, தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்க உளவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசுஅமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in