

அவிநாசி அருகே காற்று மாசு ஏற்படுத்திய தனியார் இரும்பாலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அவிநாசி அருகே பெரிய கானூரில் உள்ள தனியார் இரும்பாலையில் எழுந்த கரும்புகையால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் பாதிக்கப்பட்டது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 23-ம் தேதி வெளியானது.
இதையடுத்து, அங்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அலுவலர்கள் கூறியதாவது:
காற்று மாசு தடுப்பு சாதனங்கள், கரோனா தொற்றால் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உரிய பராமரிப்பு இருந்திருக்காது. தனியார் இரும்பாலையில் காற்று மாசு தடுப்பு சாதனங்களை, முறையாக பராமரிக்குமாறு கூறியுள்ளோம். அதேபோல் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிக அளவில் புகை வெளியேறுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனை சரி செய்தாலே காற்று மாசு குறைய வாய்ப்புண்டு. காற்றுமாசு தொடர்பாக, இரும்பாலையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆய்வு செய்து, அலுவலகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரகாலத்துக்குள் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூறினர்.