கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சென்னையில் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கம்: பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் நேற்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்ததையொட்டி, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்த பயணிகள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் நேற்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்ததையொட்டி, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்த பயணிகள். படங்கள்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில்களில் நேற்று முதல் பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 630 மின்சார ரயில்களும் முழு அளவில் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் நேற்று முதல் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முகக்கவசம் அணியாமல் வருவது உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், ரயில்வே அலுவலர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சென்னையில் 630 மின்சார ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையம்-ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்கு 123, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டைக்கு 42, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, தாம்பரத்துக்கு 116, திருமால்பூர், செங்கல்பட்டு, தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு 116, சென்னை கடற்கரை-வேளச்சேரி தடத்தில் தலா 33 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், அலுவலக நேரங்களில் ஆண் பயணிகள் ரயில்களில் பயணிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சத்தால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை. எனவே, இந்தக் கட்டுபாட்டை நீக்கினால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மக்களின் அத்தியாவசியப் போக்குவரத்து வசதியை கருத்தில்கொண்டு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆண் பயணிகளுக்கு நேரக் கட்டுபாட்டு விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in