

திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் கொள்ளையர்கள் தாக்கியதால் உயிரிழந்த ஒப்பந்த நியமனக் காவலர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பாபு என்பவர், ஒப்பந்த அடிப்படையில் காவலராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 17-ம் தேதி கோயில் உண்டியலை கொள்ளையடிக்க வந்த கும்பலால் பாபு தாக்கப்பட்டார். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாபு, கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார்.
இதேபோல், சென்னை தம்புச் செட்டி தெருவில் உள்ள நாகப்பச் செட்டி பிள்ளையார் கோயிலில் கடந்த 5-ம் தேதி திவாகரன் என்பவர், பூட்டியிருந்த கோயிலின் முகப்பில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் திருப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் விழுந்து திவாகரன் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பாபு மற்றும் திவாகரனின் குடும்பத்தினரை சென்னை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து, தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்எம்ஏ, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.