

திருத்தணியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றங்கரையோரம் வசித்த இருளர் இன மக்களுக்கு இலவச குடிமனை பட்டாவை நேற்று திருத்தணி கோட்டாட்சியர் சத்யா வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் அருகே டி.புதூர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரமாக இருளர் இன மக்கள், குடிசைகள் அமைத்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர்.
அவர்கள், மழை மற்றும் பெருவெள்ள காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர். ஆகவே, இந்த இருளர் இன மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
அதன் விளைவாக, நேற்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் டி.புதூரில் வசித்த 20 இருளர் இன குடும்பங்களுக்கு, திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் ஊராட்சியில் மாற்று இடத்துக்கான இலவச குடிமனை பட்டாவை திருத்தணி கோட்டாட்சியர் சத்யா வழங்கினார். இந்நிகழ்வில், திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் தமிழரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.