தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவசியத் தேவை கருதி, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சில தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி போட வேண்டும். மருத்துவமனைகளுடன் இணைந்து இந்தப் பணியை தொழிற்சாலை நிர்வாகங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி போடும் பணியை தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், தொழிலாளர் நலத் துறை துணை இயக்குநர், சுகாதாரத் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ஆகியோரை அணுகலாம்.

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் விவரங்களை தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் தினமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்

பூந்தமல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், நரிக்குறவர்கள், இருளர்கள் ஆகியோருக்கு துணை இயக்குநர் (பொது சுகாதார நிறுவனம்) பிரபாகரன் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் முதல், கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பூந்தமல்லி நகராட்சியின் 21-வது வார்டு பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு, பூந்தமல்லி அருகே மேல்மணம்பேடு இருளர் குடியிருப்பு பகுதிகளில் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், பொதுசுகாதார துறை அதிகாரிகள், நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கிடையே தடுப்பூசி குறித்து உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு உரிய பதில்கள் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் விளைவாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர், இருளர் இன மக்கள் நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்த முகாமில், மாவட்ட மலேரியா நோய் தடுப்பு அதிகாரி முருகன், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in