

திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி இடையே தொழில் வழித்தடம் அமைக்கும் பணிக்காக மரங்களை வெட்டாமல் வேருடன் பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில்சாலை அமைக்கும் பணி கடந்த 13-ம் தேதி தொடங்கியது. திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வழியாகப் பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பீட்டிலும், கோபால சமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடிமதிப்பீட்டிலும் பணி தொடங்கியுள்ளது. 2 ஆண்டு காலத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்படும் எனத்தெரிகிறது. இதற்காக தற்போதுள்ள 7 மீட்டர் அகலம் கொண்டசாலை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. சாலையில் உள்ள வளைவுகள் நேர் செய்யப்பட்டு, புதிய சாலை அமைக்கப்படுகிறது.
இந்தச் சாலை பணிக்காக வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வி.எம்.சத்திரம்,கிருஷ்ணாபுரம், ஆரோக்கியநாதபுரம், ஆச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த புளி, வேப்ப மரம் மற்றும் புங்கை மரங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.
2-வது நாளாக நேற்று செய்துங்கநல்லூர் பகுதியில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்த மரங்களில் பெரும்பாலானவை 100 வருடங்கள் பழமையான மரங்களாகும். இதனால் சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, “மதுரை - கன்னியாகுமரி இடையே கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்குவழிச்சாலை பணிகளுக்காக சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் இதுவரை மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவில்லை.
தற்போது தொழில் வழித்தடம் அமைக்க மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் பசுமையாக காணப்பட்ட இடங்கள் வெறுமையாகி வருகின்றன. மரங்களை வெட்டாமல் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் அவற்றை மறுபடியும் நட்டு விடலாம். ஒரு மரம் சுமாராக வளர குறைந்தது 3 ஆண்டு காலமாகும்.
வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் இணையாக 3 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். ஆனால், இந்த சொல் ஏட்டிலேயே உள்ளது. இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடும் போதே அப்பகுதியில் இருக்கும் மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் வளர்க்கும் திட்டத்தையும் இணைக்க வேண்டும்’ என்றார்.