Published : 17 Jun 2014 09:28 AM
Last Updated : 17 Jun 2014 09:28 AM

சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகளை குறிவைத்து வெடிகுண்டு வீச்சு: யாருக்கும் காயமில்லை; 3 பேர் சிக்கினர்

திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு சென்ற சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் சென்ற கார் என நினைத்து, மற்றொரு கார் மீது 10 பேர் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகளும், போலீஸாரும் உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம், அலங்கார்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன். இவருக்கும், தூத்துக்குடி மூலக்கரை பண்ணையார் குடும்பத்துக்கும் பகை இருந்துவந்தது. இவர்களது பகை காரணமாக இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பசுபதி பாண்டியன் 2011 ஜன. 10-ம் தேதி திண்டுக்கல் நந்தவனம்பட்டியில் அவரது வீட்டில் இருந்தபோது 10 பேர் கும்பலால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார், திண்டுக்கல் கரட்டழகன்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் முத்துப்பாண்டி உள்பட 18 பேர் மீது திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் 2013 டிச. 3-ம் தேதி திண்டுக்கல் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கில் குற்றம்சாட் டப்பட்ட 18 பேரில், ஒன்றியக் கவுன்சிலர் முத்துப்பாண்டி, ராஜபா ளையம் சேத்தூரைச் சேர்ந்த புறா மாடசாமி ஆகியோர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டனர்.

சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 16 பேர், தற்போது பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். சுபாஷ் பண்ணையார், அவரது கூட்டாளிகள் உயிருக்கு ஆபத்து உள்ளதால், திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு ஒவ்வொருமுறை வரும்போதும் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் 10 கார்கள் புடைசூழ வந்து செல்வர். அவர்கள் வந்து செல்லும்போது மாவட்ட எல்லை வரை பாதுகாப்புக்காக திண்டுக்கல் போலீஸார் உடன் செல்வர்.

வெடிகுண்டு வீச்சு

திங்கள்கிழமை பசுபதி பாண் டியன் கொலை வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. ஆஜராக வேண்டிய 16 பேரில் சுபாஷ் பண்ணையார், கோழி அருள், ராஜேஷ் ஆகியோர் ஆஜராகவில்லை. ஆறுமுகச்சாமி, சண்முகம், அருளானந்தம், நிர்மலா, நடராஜன், பாட்ஷா, ஆனந்த், அந்தோணி, தாராசிங், பிரபு, சன்னாசி, ரமேஷ், அருள் ஆகிய சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள் 13 பேர் மட்டும் காலை 10.20 மணிக்கு 2 கார்களில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுலைமான் சேட், விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு 13 பேரும் மீண்டும் கார்களில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். திண்டுக்கல் டி.எஸ்.பி.கள் ராமச்சந்திரன், வனிதா, இன்ஸ்பெக்டர் இளங் கோவன் ஜென்னிங்ஸ் மற்றும் போலீஸார் அவர்களுக்கு பாதுகாப்பாக 2 ஜீப்புகளில் பின்தொடர்ந்து சென்றனர்.

திண்டுக்கல் அருகே காமலாபுரம் பிரிவு சாலையை பகல் 11.20 மணிக்கு சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள், போலீஸார் வாகனங்கள் கடந்து சென்றன. இவர்கள் சென்ற சில நிமிடங்களில் இவர்கள் கார்களை பின்தொடர்ந்து ஒரு சுமோ கார் வந்துள்ளது. அப்போது அந்த காரில்தான் சுபாஷ் பண்ணையார், அவரது கூட்டாளிகள் வருவதாக நினைத்து எதிரே டிப்பர் லாரியில் வந்த இருவர் திடீரென்று சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி காரை மறித்துள்ளனர். லாரியைத் தொடர்ந்து இண்டிகா கார் ஒன்றும் வந்துள்ளது.

மேலும் இதற்காகவே, அப்பகுதியில் 5 மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் காத்திருந்த 10 பேர் கும்பல், திடீரென்று 2 நாட்டு வெடிகுண்டு களை கார் மீது வீசியது. இதில் ஒரு குண்டு வெடிக்காமல் சாலையில் விழுந்தது. மற்றொரு குண்டு கார் அருகே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தின்போது சுமோ கார் நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பண்ணையார் கூட்டாளிகளுக்கு பாதுகாப்பாக வந்த போலீஸார், வெடிகுண்டு வீசியவர்களை விரட்டிச் சென்றனர்.

இதில் இண்டிகா காரில் சென்ற 3 பேரை மட்டும் கன்னிவாடி அருகே போலீஸார் பிடித்தனர். லாரியை குறுக்காக நிறுத்தியவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பினர். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களும் தப்பினர்.

“பண்ணையாருக்குத்தான் குறிவைத்தோம்”

சுபாஷ் பண்ணையார், அவரது கூட்டாளிகள் வந்ததாக நினைத்து, பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் வீசிய வெடிகுண்டு தாக்குதலில் தப்பிய டாடா சுமோ காரை தற்போதுவரை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. அந்த கார் மதுரைக்கு மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்த காரில் வந்தவர்கள் யார், அந்த காரில் வந்தவர்களும் சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள்தானா என்ற கேள்விகளுக்கு தற்போதுவரை விடை கிடைக்கவில்லை

வெடிகுண்டுகளை வீசிய இடத்தில் இண்டிகா காரில் தப்பிய 3 பேரை மட்டும் பிடித்துள்ளனர். அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் மேலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ், விஜயபாண்டி, தச்சநல்லூரைச் சேர்ந்த மணி ஆகியோர் என்பதும், அவர்கள் போலீஸாரிடம், சுபாஷ் பண்ணையாருக்குத்தான் குறிவைத்தோம், குறி தப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர்.

சுபாஷ் பண்ணையாருக்கு, தன்மீது தாக்குதல் அபாயம் இருப்பதை நெருக்கமானவர்கள் மூலம் அறிந்ததால் அவர் திங்கள்கிழமை ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x